ஜெயங்கொண்டம் மே.19: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய ருத்ர யாகம் நேற்று வெகு விமர்சையாக கோயில் வளாகத்தின் உள்ளே பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.
முன்னதாக பிரகதீஸ்வரருக்கு சந்தனம் மஞ்சள், திரவிய பொடி பால் தயிர் எலுமிச்சை உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் உலக நன்மை வேண்டி வேத மந்திரங்கள் முழங்க யாகம் வளர்த்து பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. இதில் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கங்கைகொண்ட சோழபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.