கும்பகோணம், ஆக.23: கங்கைகொண்ட சோழபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ‘மரபு நடை’ நிகழ்ச்சி நடந்தது. தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகம், கரிகாலசோழன் கலையரங்கத்தில் மாவட்ட அளவிலான அஞ்சல்துறை கண்காட்சி வரும் அக்டோபர் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதை முன்னிட்டு ‘அஞ்சல் துறையும்’, சோழமண்டல வரலாற்று தேடல் குழு ஆகியன சார்பில் கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதல் பிரகதீஸ்வரர் கோயில் வரை ‘மரபு நடை’ நிகழ்ச்சி நடந்தது.
அதில், கண்காட்சியின் சின்னமான கடற்பசுவின் சின்னம் கோவிலில் மொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. பின்னர், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் சிறப்புகள், முக்கிய கல்வெட்டுகள், கட்டுமானங்கள் குறித்து சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு ஆண்டவர்கனி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.