ஜெயங்கொண்டம், ஆக. 23: இந்திய அஞ்சல் துறை சார்பில் மாவட்ட அளவிலான அஞ்சல் துறை தபால்தலை கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 8 மற்றும் 9ம் தேதிகளில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாக கரிகாலச் சோழன் கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.
அதன் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறை மற்றும் சோழமண்டல வரலாற்றுத்தேடல் குழு இணைந்து கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு அப்பள்ளியில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் கோயில் வரை மரபு நடை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது கண்காட்சியின் சின்னமான கடல் பசுவின் சின்னம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் சிறப்புகள் முக்கியமான கல்வெட்டுகள் கட்டுமானங்கள் குறித்து சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழுவில் இருந்து வந்திருந்த ஆண்டவர்கனி என்பவர் பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி முதுநிலை அஞ்சல்கோட்ட கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் கும்பகோணம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் செய்திருந்தனர்.