விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள் வீரவநல்லூர்,ஜூன் 26: சேரன்மகாதேவி அடுத்த கங்கனாங்குளம் குளக்கரையில் சாலை தெரியாத அளவிற்கு வளர்ந்திருக்கும் செடிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. சேரன்மகாதேவி-களக்காடு சாலையில் கங்கனாங்குளம் குளக்கரை உள்ளது. ஆபத்தான வளைவுகள் கொண்ட இந்த குளக்கரை சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இந்த குளக்கரையின் இருபுறமும் 4 கி.மீட்டர் சுற்றளவில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் இச்சாலையில் பயணிக்கின்றனர்.
இந்நிலையில் குறுகிய வளைவுகள் கொண்ட இக்குளக்கரை சாலையின் இருபுறமும் செடிகள் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளதால் வளைவில் சாலை முற்றிலும் மறைந்துள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த குளக்கரைச் சாலையில் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளில் சிக்கி பலியாகியுள்ளனர். எனவே இந்த குளக்கரையில் சாலையின் இருபுறமும் வளர்ந்திருக்கும் செடிகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனிவருங்காலங்களில் பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன்பு உள்ளாட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.