ஆறாவது படைவீடாகத் திகழ்கிறது பழமுதிர்சோலை. இது ‘அழகர் கோயில்’ என்றும் வழங்கப்பெறுகிறது. முருகப்பெருமானின் தலமாகவும் திருமாலின் தலமாகவும் இது விளங்குகின்றது. திருமாலுக்கு உரியதாய் விளங்கும் அழகர் என்னும் திருப்பெயர் முருகனுக்கும் பொருந்துவதாகும். மலையடிவாரத்தில் அழகர்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் உள்ளது முருகன் கோயில். சிறிய கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் அழகு முருகன் காட்சி தருகின்றார். முருகன், ஔவையுடன் “சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?” என்று இங்கு நடத்திய திருவிளையாடல் அனைவரும் அறிந்த ஒன்று. முருகப் பெருமான் ஒளவைப் பிராட்டிக்கு நாவற் பழங்களை உதிர்த்தார் என்றும், சில விளக்கங்களைக் கேட்டு, தமிழ் மூதாட்டியின் வாயிலாகப் பயனுள்ள நீதிகளை உலகுக்கு உணர்த்தினார் என்றும் கூறப்படுகிறது. இந்த மலைமேல் உள்ள அடர்ந்த காட்டில் வள்ளி வசித்ததாக நம்பிக்கை. வள்ளிநாயகிக்கு அருள்புரிந்த முருகவேளே பழமுதிர்சோலையில் எழுந்தருளியவன் என்று கந்த புராணம் கூறுகிறது. மலைக்கோவிலில் முருகன் ஞான சக்தியாகவும், வள்ளி இச்சா சக்தியாகவும், தெய்வானை க்ரியா சக்தியாகவும் அருட் பாலிக்கின்றனர். இம்மலை, ‘விருஷபாத்ரி’, ‘இடபகிரி’ என்றும் அழைக்கப்படுகின்றது. முருகன் நின்ற கோலத்தில், ஒரு முகத்துடனும், நான்கு கைகளுடனும், இரு பக்கமும் வள்ளி, தெய்வானையுடனும் காட்சியளிக்கிறார். விநாயகர் தனிச்சந்நதியில் காட்சியளிக்கிறார். தலவிருட்சம் நாவல் மரம். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆரம்பத்தில் கல்லில் வேல் வடிக்கப்பட்டும், பின்னர் மரத்தில் முருகன், வள்ளி, தெய்வானை வடிக்கப்பட்டும் வணங்கப்பட்டிருக்கிறது. ஆதி வேல் கல் மேடையிலும், அதன் வலப்புறம் வித்தக விநாயகரும் வைக்கப்பட்டிருந்திருக்கிறது. சமீபகாலத்தில் கோபுரம் எழுப்பப்பட்டு ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மலை உச்சியில் நூபுர கங்கை என்னும் அருவி உள்ளது. விஷ்ணுவின் கணுக்காலில் இருந்து தோன்றியதால் ‘நூபுர கங்கை’ என்னும் பெயராம். பொதுவாக ஆடி, ஆவணி மாதங்களில்தான் நாவல் மரம் காய்ப்பது வழக்கம். ஆனால் இக்கோயிலில் ஐப்பசி மாதத்தில், கந்தசஷ்டி விழாவின் போது காய்ப்பது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தில் தினமும் ஆறுகால பூஜை நடக்கின்றது. சித்திரை பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் மிகச் சிறப்புடன் நடைபெறுகின்றன. தினந்தோறும் மாலை 7.00 மணிக்கு முருகன் தங்க ரதத்தில் வலம் வருகிறார். மதுரைக்கு அருகே இயற்கை எழில்சூழ மிளிரும் தலம் பழமுதிர்சோலை. மலை அடிவாரத்திலிருந்து ஆலயத்துக்குச் செல்லப் பேருந்து, ஆட்டோ வசதி உண்டு. முருகனின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது வீடாகும்….
ஔவைக்கு அருளிய அழகன்
previous post