அரியலூர், ஆக. 6: ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டுமென கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரியலூர் மாவட்டத்தில் காரிப்பருவத்தில் 2023-202 ம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக ஓலையூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகஸ்ட் 1 முதல் திறக்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா அடங்கல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று பதிவு உள்ளீடு செய்து கொள்ளவேண்டும். நேரடிநெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும்இ சம்பந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும் ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லினை தூற்றி சாக்குகளில் பிடித்து எடை வைத்து தைத்து லாரியில் ஏற்றுவதற்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.100 வீதம் சுமை தூக்கும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக கழகத்தின் மூலம் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.