ராமநாதபுரம்: ஓரிவயல் பகுதி விவசாயிகளுக்கு வழங்காமல் இருக்கும் பயிர் காப்பீடு நிலுவை தொகையை விரைந்து வழங்கக் கோரி விவசாயிகள் டி.ஆர்.ஓவிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் ஓரிவயல் பகுதி விவசாயிகள் மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் 2012 ஆண்டு பருவமழை பொய்த்ததால் வறட்சி ஏற்பட்டது. இதனால் கடலாடி தாலுகா உட்பட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தேசிய பயிர் காப்பீடு திட்டத்தில், காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
கடலாடி தாலுகா ஓரிவயல், மாரந்தை, பனைக்குளம், ஆலங்குளம், சித்துடையான் உள்ளிட்ட பகுதிகள் வறட்சியால் முழுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் ஏக்கருக்கு ரூ.1800 மட்டும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. இது குறைந்த தொகை என்பதால் காப்பீடு நிறுவனம் வழங்கிய அந்த தொகையை அப்போது விவசாயிகள் பெறவில்லை,இது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் கூடுதல் இழப்பீடு தொகை வழங்க உத்திரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் காப்பீடு நிறுவனம் வழங்கிய தொகையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியது. இதனால் காப்பீடு நிறுவனம் வழங்கிய ரூ.1800ஐ பெற முடிவு செய்துள்ளோம். எனவே நிலுவையிலுள்ள அந்த தொகையை மீண்டும் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.