கோவை, ஜூலை 4: தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழ்நாடு தேர்தல் களத்தில் வித்தியாசமான பிரசாரங்களை திமுக முன்னெடுத்திருக்கும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க, மொழி, இனம் காக்க ஓரணியில் தமிழ்நாடு திரள வேண்டும் என்னும் நோக்கத்துடன், திமுகவின் இந்த பிரசாரம் நேற்று ஆரம்பமானது. கோவை டவுன்ஹால் பகுதியில் மணிக்கூண்டு முன்பாக அமைக்கப்பட்டுள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்னும் லோகோ கட்டமைப்புக்கு முன்பாக, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் திரண்ட நிர்வாகிகள், இப்பிரசாரத்தை ஆரம்பித்தனர்.
அப்போது, தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள், மொழி, இன பாதுகாப்பு, உரிமை கோரல் மற்றும் பா.ஜ தலைமையிலான ஒன்றிய அரசின் அவலம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் முழக்கங்களை எழுப்பினர். மேலும், தமிழ்நாடின் சுயாட்சி, மொழி, இன உணர்வு உள்ளிட்டவற்றை காப்பதற்கு, ஓரணியில் தமிழ்நாடு திரள வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு ஓராண்டுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் பொதுமக்களிலேயே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்பிரச்சார நிகழ்ச்சியில், மாநகர் மாவட்ட திமுக துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், பகுதிக்கழக செயலாளர்கள் மார்க்கெட் மனோகரன், பத்ருதீன், முருகேசன், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், இளைஞர்அணி அமைப்பாளர் தனபால், தீர்மான குழு இணை செயலாளர் மு.ரா.செல்வராஜ், வார்டு செயலாளர்கள் டவுன் ஆனந்த், அப்பாஸ், சோமு உள்பட பலர் கலந்துகொண்டனர்.