விருதுநகர், ஆக.1: ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி விருதுநகரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல்லில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு 15 சதவீத பென்சன் உயர்வை கடந்த 2017 ஜனவரி 1 முதல் ஒன்றிய பாஜ அரசு வழங்க வேண்டும், ஓய்வூதிய மாற்றத்தை, சம்பள மாற்றத்துடன் இணைத்து உடனடியாக வழங்க வேண்டும். தொலைத் தொடர்பு துறையின் அதிகாரத் தளத்தை களைய வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல்-எம்டிஎன்எல் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். பொன்ராஜ், முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் புளுகாண்டி வரவேற்றார். மாநில பொருளாளர் கோவிந்தராஜன் துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாநில உதவித் தலைவர் பெருமாள்சாமி, எஸ்.என்.பி.டபுள்யு.ஏ.மாநில உதவி செயலாளர் மனோகரன், பி.எஸ்.என்.எல்.இ.யு மாவட்ட செயலாளர் குருசாமி, டி.என்.ஜி.பி.ஏ மாவட்ட செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் பேசினர். முடிவில் சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.