விருதுநகர், ஆக.30: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன்பாக ஏஐடியுசி கட்டுமான தொழிலாளர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நலவாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும் இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும். ஓய்வூதியம் மாதம் ரூ.2 ஆயிரம், மனு செய்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும். வீடு கட்ட மானியம் ரூ.4 லட்சமாக இருப்பதை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
வீட்டு வசதி திட்டம் துவங்கி 3 ஆண்டுகளாகியும் திட்டத்தை நிறைவேற்றாமல் காலம் கடத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் மரணமடையும், ஊனமடையும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு சட்டப்படி இழப்பீடு வழங்க வேண்டுமென்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாநில செயலாளர் சேது, மாவட்ட தலைவர் சமுத்திரம், செயலாளர் முத்துமாரி, சிபிஐ மாநில குழு பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.