திருமங்கலம், ஜூலை 9: திருமங்கலம் அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து 21 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 லட்சம் ரொக்கப்பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் அருகேயுள்ள மேலக்கோட்டை பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜன்(66). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது மனைவி அறிவைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனைவியை நாகராஜன் விருதுநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகராஜன் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து அவருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தனது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டிற்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 21 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து நாகராஜன் நேற்று திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. திருட்டு குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.