நெய்வேலி, ஜூலை 23: நெய்வேலி அருகே ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியர் வீட்டில் 9 பவுன் நகை, ரூ.ஒன்றரை லட்சம் பணம், கார் ஆகியவை திருடுபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெய்வேலி அடுத்த வடக்குத்து ஊராட்சி காந்திநகர் அசோக் நகர் விரிவாக்கத்தில் வசித்து வருபவர் ரகுகுமார் (62). இவர் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த கார் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 9 பவுன் தங்க நகை, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் பணம், வெள்ளி பொருட்கள், கார் உள்ளிட்டவை திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா, காவல் ஆய்வாளர் சுதாகர் ஆகியோர் விசாரணை செய்தனர். மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்தனர். இச்சம்பவம் குறித்து ரகுகுமார் நெய்வேலி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். ஓய்வுபெற்ற என்எல்சி ஊழியர் வீட்டில் கார், நகை, பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.