வேலூர், மே 24: கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு வழங்குவதற்காக பணிக்காலத்தில் மறைந்த மற்றும் மருத்துவக்காரணங்களால் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் விவரங்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், தொடக்கக்கல்வி அலுவலகங்கள், பள்ளிகளில் குரூப் சி, குரூப் டி பிரிவு பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இவ்வாறு நிரப்பப்படும் பணியிடங்களில் கருணை அடிப்படையில் காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையில் குரூப் சி மற்றும் டி பிரிவு பணியிடங்களுக்கான நியமன அலுவலராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இருக்கிறார்.
இந்நிலையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘இத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிபுரிந்து 2024 செப்டம்பர் 1 முதல் 2025 ஜனவரி 31ம் தேதி வரை காலமான அல்லது மருத்துவக்காரணங்களால் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் யாருடைய பெயரும் விடுபடாதவாறு கையொப்பத்துடன் முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர மாதந்தோறும் 10ம் தேதிக்குள், அதற்கு முந்தைய மாதத்தில் காலமான அல்லது மருத்துவக்காரணங்களால் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பணியாளர்களின் விவரங்களை இயக்குநரகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செயல்பட வேண்டும்’ என்று பள்ளி கல்வித்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.