மேட்டூர், ஆக.29: மேச்சேரி அருகே, ஓய்வு பெற்ற சப் கலெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேச்சேரி அருகே ஏரகுண்டபட்டியை சேர்ந்தவர் நடராஜன்(72). ஓய்வு பெற்ற சப் கலெக்டர். கடந்த வெள்ளிக்கிழமை, ஓசூரில் உள்ள தனது மகன் ஹரிபிரசாத் வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு, அருகில் வசிப்பவர்கள் போன் செய்து தெரிவித்தனர்.
உடனடியாக ஓசூரில் இருந்து வந்த போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு, வெள்ளி டம்ளர்கள் 2, வெள்ளித் தட்டு, வெள்ளி சந்தன கிண்ணம் அரைஞான் கயிறு, குழந்தைகளின் கால் காப்பு, கால் பவுன் தங்கத்தோடு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து நடராஜன் மேச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் மற்றும் மேச்சேரி இன்ஸ்பெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, தடயங்களை சேகரித்தனர். இதேபோல், நடராஜன் வீட்டிற்கு எதிரே உள்ள சின்னமுனியப்பன் என்பவரது ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து திருட முயன்றனர். ஆனால் பொருட்கள் ஏதும் கிடைக்காததால் திரும்பி சென்றனர். ஒரே இரவில் அடுத்தடுத்து 4 இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம், மேச்சேரியில் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.