Saturday, June 14, 2025
Home மருத்துவம்ஆலோசனை ஓய்வும் ஒரு சிகிச்சையே!

ஓய்வும் ஒரு சிகிச்சையே!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் கவுன்சிலிங்பரபரப்பாக வேலைக்குச் செல்லும் நேரத்தில் நாம் ஏற வேண்டிய ரயிலை நாம் தவற விட்டாலோ, ரயில் வருவதற்கு தாமதமானாலோ உடனே நமக்கு ரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்துவிடும். அழகாக ஆடை அணிகலன்கள் அணிந்து கொண்டு பார்ட்டிக்குச் செல்லும் நேரத்தில் நம் வாகனம் போக்குவரத்து நெரிசலில் மாட்டி நமக்கு வியர்த்து வழியும்போது கட்டாயம் நமக்கு மனதின் எரிநிலை என்கிற டென்ஷன் ஆரம்பித்துவிடும். பிள்ளைகள் தேர்வில் சரியாக மதிப்பெண் எடுக்க வில்லையா அப்படி ஒரு கோபம் வரும். மறுபடியும் டென்ஷன்.இப்படியாக இன்றைய வாழ்க்கை முறை என்பது தினந்தோறும் பலவிதமான அழுத்தங்கள் நிறைந்ததாகவே இருக்கிறது. நெருப்பை பற்ற வைத்து ஓட விடுவதுபோல் எந்நேரமும் பதற்றத்திலே நம்மை வைத்திருக்கிறது இந்த வாழ்க்கை.வீடு, வேலை, சமூகம் என பல தரப்பிலிருந்தும் விரைவு, பரபரப்பு, அழுத்தம் உள்ள சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். ஒரு சிலருக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதே கூட ஒரு அழுத்தமாக இருக்கிறது. இந்த அழுத்தங்களிலிருந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளாதபோது வரும் பிரச்னைகள் கொஞ்சமல்ல.வேலை, ஓட்டம், பதற்றம் என்று ரிலாக்ஸ் செய்துகொள்ளாமல் இருக்கும்போது கடுமையான தலைவலி, உடல்வலி, தூக்கமின்மை மற்றும் தூக்கக் குறைபாடு, குழப்பம் மற்றும் மறதி, இதயக் கோளாறுகள், ஜீரணக்கோளாறுகள், எடை அதிகரித்தல் அல்லது எடை மிகவும் குறைந்து போதல், புகையிலை, மது அல்லது போதை மருந்திற்கு அடிமையாதல், மன அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள், சமூகத்தோடு ஒன்றாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளல், அடிக்கடி அழுகை, தற்கொலை எண்ணம், தோற்றம் மற்றும் வேலையில் ஈடுபாடின்மை, நேரந்தவறுதல், சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் கோபப்படுதல், எரிச்சல் அடைதல், படிப்பில் கவனமின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.இது மட்டுமல்ல…. மன அழுத்தம் இருக்கும்போது உங்களுடைய பெஸ்ட்டை நீங்கள் பார்க்க முடியாது. அதாவது உங்கள் திறமையை நீங்களே உணர முடியாது. ரிலாக்ஸ் செய்து கொள்ளவெல்லாம் நமக்கு நேரமே இல்லை. உண்மைதான். ஆனால், இவற்றுக்கிடையில் தனியாக நமக்கென்று ஒதுக்க ஏது நேரம் என்று நாம் கேட்டாலும் கட்டாயம் நாம் அனைவரும் நமக்கே நமக்கென்று நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும்.ஓய்வானது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் ஆரோக்கியம் தரும் விஷயமாக இருக்கிறது. தினசரி வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது. அதனால் ஒவ்வொருவரும் தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்வது அவசியமாகிறது. ரிலாக்ஸ் செய்து கொள்வது என்பது ஆரோக்யத்துக்கு முக்கியமான தேவையும் கூட. ;ரிலாக்ஸ் செய்வது என்பது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயமில்லை. நாம் எவ்வளவு பிஸியான மனிதர்களாக இருந்தாலும் சில மணித்துளிகளில் எளிமையாக ரிலாக்சேஷன் செய்ய முடியும் என்பதை நம்ப முடிகிறதா?ஆம்…. ரிலாக்சேஷன் என்னும் எளிமையான சிறு பயிற்சி நம்மை பல மன அழுத்தங்களில் இருந்து விடுவிக்கும் எனும் போது அதை நமது அதிர்ஷ்டம் என்று தானே சொல்ல வேண்டும். நம்மை கூல் பண்ணிக் கொள்ள சிறப்பான சுலபமான ஒரு வழி கிடைக்கும் என்றால் வேண்டாம் என்பீர்களா என்ன?சில டிப்ஸ்கள்….தினசரி வெறும் ஐந்து நிமிடங்கள் மட்டும் போதும் என்றால் கட்டாயம் ரிலாக்சேஷன் பயிற்சி செய்யும் எண்ணத்திற்கு மாறிவிடுவீர்கள்தானே? ஆம்… நம்ப முடியாவிட்டாலும் அதுதான் உண்மை. வெறும் ஐந்து நிமிடம் நாம் செய்யும் இந்த செயல் நம்மை மனச்சோர்விலிருந்தும் உடல் சோர்விலிருந்தும் மீட்டெடுக்கிறது.உடலும் உயிரும் இசைந்து இணங்கி இயங்கும் நிலையில் இணைக்கப் பெற்று வாழ்ந்து வருபவன் மனிதன். அற்புதமான தொகுப்பாக உள்ள இந்த உடல் அமைப்பு வியத்தகு ஆற்றல்களை உள்ளடக்கியது. உயிரின் மதிப்பை உணர்ந்து உடலை நலமோடும் வளமோடும் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு பின்வரும் பயிற்சித் தொடர் உங்களுக்கு கட்டாயம் உதவும்.மூச்சுப் பயிற்சிஎந்த நேரத்திலும் எந்த இடத்திலும் செய்யக்கூடிய எளிமையான ஒரு பயிற்சி. இந்த வாழ்க்கையில் நமக்கு கிடைத்த சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் மூச்சுப்பயிற்சி. நிமிர்ந்து உட்கார்ந்து கண்களை மூடி நம் சுவாசத்தை கவனிக்க ஆரம்பிக்க வேண்டும். படுத்துக்கொண்டும் செய்யலாம். வீட்டில் படுக்கையிலோ தரையிலோ படுத்துக்கொண்டு வயிற்றில் ஒரு கையை வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சைக் கவனித்து மெல்ல மூச்சை ஆழமாக உள்ளிழுக்க வேண்டும்.எண்ணிக்கை மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும். பிறகு மெல்ல மூச்சை வெளியே விட்டு எண்ணிக்கை மூன்று வரை மெதுவாக எண்ண வேண்டும். மூச்சினை இழுக்கும்போது உங்கள் வயிறு உள்ளே போவதையும் மூச்சினை வெளிவிடும்போது உங்கள் வயிறு வெளியே வருவதையும் (பெரிதாவதையும்) உணர்வீர்கள். இதுபோல ஐந்து முறை செய்யலாம் அல்லது உங்களுக்கு எவ்வளவு நேரம் ரிலாக்சேஷன் வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அவ்வளவு நேரம் வரை செய்யலாம்.உடலை தளர்த்தும் பயிற்சிமன அழுத்தம் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பயிற்சி உடல் மற்றும் மனது இரண்டையும் தளர்த்தி ரிலாக்ஸ் செய்யும். படுக்கை அல்லது படுக்கை விரிப்பு அல்லது யோகா மேட் மீது தளர்ந்த நிலையில், முகத்தை மேல் நோக்கியவாறு வைத்துக் கொண்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கண்களை மூடிக்கொள்ளவும்.கால்களைப் பிரிந்திருக்கும்படியாக தளர்வாக படுத்துக்கொள்ளவும். இப்பொழுது கால் பாதங்களில தொடங்கி மேல் நோக்கியவாறு உடலை மனதினால் தளர்த்திக் கொண்டே வரவும். அல்லது தலைப்பகுதியில் தொடங்கி கீழ் நோக்கி உடலை மனதினால் தளர்த்திக் கொண்டே வரவும். அதாவது இப்பொழுது என் பாதங்கள் ஓய்வு கொள்கின்றன என இவ்வாறு மனதினுள் நினைத்துக் கொள்ளுங்கள். இப்படியாக ஒவ்வொரு உறுப்பாக மனதினுள் நினைத்துக் கொள்ளுங்கள்.ஓய்வு…. ஓய்வு…. ஓய்வு… உடல் முழுவதும் நன்றாக ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கிறது என்பதை மனதால் உணருங்கள்.பின் நிறைவாக கண்களை மூடியவாறே, உடலை மறந்த நிலையிலே வேறு எண்ணங்களின்றி சுவாசம் வெளியே போவதையும், உள்ளே வருவதையும் கவனித்துக் கொண்டு தளர்வான நிலையில் பத்து நிமிடங்கள் வரை இருக்கவும். கண்கள் மூடியே இருக்க வேண்டும். அப்போதுதான் உடல் அசைவுகளிலேயே மனம் செல்ல வசதியாக இருக்கும். மனம் அப்படி உடல் அசைவுகளில் செல்வது உடலை தளர்த்தும் பயிற்சிக்கு அவசியம்.சிலருக்கு உறக்கம் கூட வரலாம். வந்தால் இன்னும் நல்லது. கொஞ்ச நேரம் உறங்கிவிடலாம். எழுந்திருக்கும் போது கை கால்களை அசைத்து ஒரு பக்கமாக திரும்பி மெல்ல கைகளை ஊன்றி எழுந்திருக்கவும். இதனால் உயர் ரத்த அழுத்தம் குறையும். உடலிலும் மனதிலும் ஏற்படும் டென்ஷன் மாறி அமைதி உண்டாகும்.; உடலுக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். பின்னர் அந்த நாளுக்குத் தேவையான சுறுசுறுப்பு கிடைக்கும்.இரவில் உறக்கம் வராதவர்கள் கூட இந்த உடலை தளர்த்தும் பயிற்சியை செய்தால் உறக்கம் வர அதிகம் வாய்ப்புண்டு. அமைதியை தேடுங்கள்உங்கள் உணர்வுகளை காது கொடுத்து கேளுங்கள். இந்த உலகத்திலே உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் இடம் எது? என்று என்றாவது; யோசித்திருக்கிறீர்களா? பாதுகாப்பான அமைதியான ஓர் இடம், உங்கள் படுக்கையறை போன்ற ஓர் இடத்தில் அமர்ந்து உங்கள் உள்ளம் சொல்லும் விஷயத்தை கவனியுங்கள்.உங்களுக்கு மகிழ்ச்சி தரும் இடம் எது என்று அது குறித்து ஆலோசனை செய்யுங்கள். அதன் பிறகு அந்த இடத்தை மனதால் பாருங்கள். அந்த இடத்தின் வாசனையை உணருங்கள். அந்த இடத்தின் ஒலிகளை மனதினால் கேளுங்கள். அந்த இடத்தில் நீங்கள் இருப்பது போல் கற்பனை செய்து கொள்ளுங்கள்.பீச்சில் இருப்பதாக கற்பனை செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கடலலைகளின் தாளலயத்தை கற்பனை செய்யுங்கள். அப்படியே பிள்ளைகள் பீச்சில் விளையாடும் ஒலி, மாலை நேரத்து மஞ்சள் வெய்யில், குளிர்ச்சியான ஐஸ்கிரீமின் சுவை, கால்களில் உறுத்தும் மணல் என அனைத்தையும் மனதால் பாருங்கள். எந்த அளவிற்கு மனதால் உங்களுக்கு சந்தோஷம் தரும் இடத்தை உணர்கிறீர்களோ? அந்த அளவிற்கு நீங்கள் ரிலாக்ஸாக உணர்வீர்கள்.இயற்கையுடன் இயைந்த வாழ்வுமன அழுத்தமாக உணரும்போது சிறிதாக காலார வெளியே நடக்க ஆரம்பித்துவிடுங்கள். பூங்கா போன்று வெளியில் உங்களுக்கு பிடித்தமான இடத்திற்குச் சென்று சிறிது நேரம் அமர்ந்திருங்கள். இயற்கையோடு சிறிது நேரத்தை செலவிடுங்கள். வெளியில் செல்ல இயலாத சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்றால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. அறிவியலாளர்களின் ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.இயற்கையின் ஓவியம் அல்லது படத்தைப் பார்த்தாலே நமக்கு ஒரு மன நிம்மதி கிடைக்கும். கணினி முன் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் கணினியில் கூட இயற்கை படங்களை பார்க்கலாம். மனதிற்கு அமைதி கிட்டும் என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள். இயற்கையை உணர்ந்து, ரசித்து அதனோடு ஒன்றி வாழ்ந்து நிறைவுபெற்று நிலையான அமைதியைப் பெறுவதையும் உள்நோக்கமாகக் கொண்டதே மனித வாழ்க்கை.ரிலாக்சேஷன் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, இன்றைய சூழ்நிலையில் சிறு பிள்ளைகள், வளரிளம் பருவத்தினர் என அனைவருக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. அவர்களுக்கு ரிலாக்சேஷன் தேவைப்படும் வேளையில் இந்த பயிற்சிகளை செய்ய அவர்களுக்குக் கற்றுத்தாருங்கள். அல்லது நீங்களும் அவர்களோடு இணைந்து இந்த பயிற்சிகளை செய்யுங்கள். உங்களுக்கும் நல்ல ரிலாக்சேஷன் கிடைக்கும். அவர்களுக்கும் இந்த பயிற்சி பழகும்.ரிலாக்சேஷன் செய்துகொள்வதால் கிடைக்கும் நன்மைகள்* மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்களை நீக்கும். உடலும் ரிலாக்ஸ் ஆவதால் உடலுக்கும் நன்மை கிடைக்கும்.* தெளிவாக யோசிக்கவும் தெளிவான முடிவுகள் எடுக்கவும் உதவும்.* எதிர்காலத்தில் ஏற்படும் மன அழுத்தங்களை தவிர்க்கும் சக்தியும் கிடைக்கும்.* வாழ்க்கைக் குறித்த நேர்மறையான சிந்தனையும் அதன் மூலம் நல்ல தன்னம்பிக்கையும் கிடைக்கும்.* அச்சம் அகன்று மனதுக்கு நிம்மதி ஏற்படும். புதிய ஆரோக்யமான மனநிலை ஏற்படும்.* கவலை அகன்று அமைதி உண்டாகும். உயர்ந்த எண்ணங்கள் உருவாகி மனது நிறைந்து இருக்கும். சுறுசுறுப்பும் உழைப்பின் மேல் ஆர்வமும் கூடும்.* ஆழமாக மெதுவாக நாம் செய்யும் மூச்சுப்பயிற்சியால் மனம் ரிலாக்ஸ் ஆவதோடு உடல்தசைகளும் தளர்வதால் இரத்த அழுத்தம் குறையும்.* சுவாசப் பிரச்னைகள் குறையும்.* மாரடைப்பு, ஆட்டோ இம்யூன் நோய்கள், மனநல குறைபாடுகள், மற்றும் மன அழுத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.* இயல்பான வாழ்க்கையை நடத்துவதற்கு தேவையான உற்சாகத்தைக் கொடுக்கும்.* ஆபத்தான சூழ்நிலைகளில் இருந்து விடுபட உங்களை வழி நடத்தும்.* சரியான பயிற்சியை மேற்கொள்ளும் போது தீய விளைவுகளைச் சரிபடுத்திக் கொண்டு உடல்நலத்தைப் பெறலாம். பெரும் அளவில் நன்மைகள் பெறலாம்.தொடர்ந்து இந்த ரிலாக்சேஷன் பயிற்சியை மேற்கொள்ளும் பிள்ளைகள் படிப்பில் கவனத்தை அதிகம் செலுத்த முடியும். அழுத்தமான சூழலில் அவ்வளவாக படிப்பு ஏறாது. இந்த பழக்கத்தினால் ஏற்படும் மன அமைதியின் காரணமாக மாணவர்களுக்கு கிரகிக்கும் திறன், பதிவு கொள்ளும் திறன், நினைவு கூறும் திறன் அதிகரித்து படிப்பது எளிதாகி, தேர்வுகளில் மதிப்பெண் கூடும். படிப்பினில் மட்டுமல்லாது பள்ளியில் மற்ற பிள்ளைகளோடு பழகுவதில் ஏற்படும் பிரச்னைகளையும் பிரச்னையாக்காமல் சுலபமாக அந்த சூழலை அவர்களால் மாற்ற முடியும்.ஒரு இறுக்கமான சூழலை ஜாலி மோடுக்கு மாற்றக் கூடிய, அந்த சூழலை கையாளக் கூடிய அனுபவத்தோடு கூடிய ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இதனால் மற்ற பிள்ளைகளும் இவர்களிடம் எளிதில் நட்பாகி விடுவார்கள். மாணவர்களிடத்தில் ஒழுக்க மேம்பாடு இயல்பாகவே உருவாகும். எப்படி ரிலாக்ஸ் என்பதை கற்றுக்கொள்வதன் மூலம் உங்கள் மன அழுத்தங்களை நீங்கள் கையாள முடியும்.மன அழுத்தங்களை உங்களிடம் இருந்து தூர விரட்டி அடிப்பதில் ரிலாக்சேஷன் பயிற்சிகள் கட்டாயம் முதலிடத்தில் இருக்கும். ஒரு வேளை இந்த பயிற்சிகள் எல்லாம் மன அழுத்தங்களில் இருந்து விடுபட உங்களுக்கு பலனளிக்கவில்லை எனும் போது நீங்கள் மன நல ஆலோசகர் அல்லது மனநல மருத்துவரின் உதவியை நாடலாம். அவர்கள் உங்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பார்கள்!– சக்தி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi