சிதம்பரம், ஜூலை 2: நடராஜர் கோயிலில் நேற்று நடந்த ஆனி திருமஞ்சன திருவிழா தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவ கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இவை பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம். இதில் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தாண்டு ஆனி திருமஞ்சன உற்சவ திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 24ம் தேதி வெள்ளி சந்திரபிறை வாகன வீதி உலா நடைபெற்றது.
இதைதொடர்ந்து 30ம் தேதி வரை பல்வேறு வாகன வீதி உலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை துவங்கி நடைபெற்றது. முன்னதாக மூலவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சித்சபையில் இருந்து அதிகாலை 5 மணி அளவில் உள்பிரகார வலம் வந்து, தேவ சபையில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. பின்னர் கீழ ரத வீதியில் உள்ள ஜோடிக்கப்பட்ட 5 தேர்களில் விநாயகர், முருகர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் போன்ற சுவாமிகள் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மேள வாத்தியங்கள் முழங்க ஓம் நமச்சிவாயா, ஓம் நமச்சிவாயா என்ற பக்தி கோஷங்கள் விண்ணதிர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி உள்ளிட்ட 4 மாட வீதிகள் வழியாக தேர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்நிகழ்ச்சியில் மூலவரும், உற்சவருமான நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கருவறையை விட்டு வெளியே வந்து, தேர் வீதி உலா வருவது உலகில் வேறு எங்கும் காண முடியாத, சிதம்பரத்தில் மட்டுமே நடைபெறக்கூடிய முக்கிய விழாவாகும்.
தேரோடும் நான்கு வீதிகளிலும் சிவ வாத்தியங்கள் முழங்க, சிலம்பாட்டம், கோலாட்டம் நடைபெற்றது. தேரோடும் வீதியில் பெண்கள் கோலங்கள் போட்ட வண்ணம் இருந்தனர். இதைதொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனை நடைபெற்றது. இன்று (2ம் தேதி) காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா மற்றும் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது. 3ம் தேதி பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, 4ம் தேதி தெப்பல் உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தேரோட்ட விழாவில் சிதம்பரம் நகராட்சி சார்பில், நகரமன்ற தலைவர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தது. கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் மேற்பார்வையில் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்பட 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.