ஆரல்வாய்மொழி, நவ.22: ஒன்றிய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: கன்னியாகுமரி கோவளம் மீனவ கிராமத்தை சேர்ந்த பெதலீஸ் தலைமையில் 9 மீனவர்கள், தூத்துக்குடி வீரபாண்டியபட்டணத்தை சேர்ந்த பிரமோத் உள்பட 8 மீனவர்கள் என 17 பேர் ஓமன் நாட்டுக்கு மீன் பிடி தொழிலுக்கு சென்றிருந்தனர். இந்த 17 பேருக்கும் ஓமன் நாட்டு விசைப்படகு உரிமையாளர் கடந்த 3 மாதமாக ஊதியம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மீனவர்கள் மீன் பிடித்து அதனை ஒரு அரபி உரிமையாளரிடம் ஒப்படைத்து சம்பளம் பெற்று வந்துள்ளனர். அந்த அரபி ஒவ்வொரு மாதமும் மீன்பிடித்ததற்குரிய சம்பளத்தை கொடுக்கும் போதெல்லாம் ஒரு தொகையை பிடித்தம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.
இது குறித்து பெதலீஸ் கேள்வி கேட்டதால் ஏற்பட்ட பிரச்னையில் விசைப்படகு உரிமையாளர் தரப்பினர் சட்ட விரோதமாக அவரை சிறைபிடித்து சென்றதாக பிற மீனவர்கள் அவரது மனைவி சோபா ராணிக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். மேலும் ஓமன் நாட்டில் உள்ள பிற மீனவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக காலமாக உணவு பொருள் வழங்க மறுத்து வருவதாகவும் தெரிகிறது. உடனே அவர் கணவரை மீட்டு தரக்கோரி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தார். குமரியை சேர்ந்த மற்ற மீனவர்களின் குடும்பத்தினரும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.