ஊட்டி, ஆக.29: ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பொதுவாக அண்ைட மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பண்டிகை விடுமுறை வந்தால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக, கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையின் போது 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும். அதேபோல், கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறையின் போதும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
இந்நிலையில், இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கேரள மாநிலத்தில் விடுமுறை என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று முதல் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால், ஊட்டியில் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம் உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் பெரும்பாலான லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களும் புக்கிங் செய்யப்பட்டுள்ளது.கேரள மாநில சுற்றுலா பயணிகள் வருகையால் பெரும்பாலான ஓட்டல்களில் ஓணம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று கேரள மாநிலத்தில் இருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், ஊட்டியில் உள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.