பாலக்காடு, ஜூலை28: பாலக்காடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓணம் திருவிழா பம்பர் லாட்டரி சீட்டினை கலெக்டர் டாக்டர் சித்ரா அறிமுகப்படுத்தி அதன் விற்பனையை துவக்கி வைத்தார். விழாவில் துணை கலெக்டர் ஆல்பிரட், மாவட்ட பரிசு சீட்டு அதிகாரி விஜயலட்சுமி, மாவட்ட பரிசு சீட்டு நலவாரிய அதிகாரி ஸ்ரீகுமார், லாட்டரி தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், ஏஜென்டுகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் 70 ஆயிரம் திருவோணம் பம்பர் பரிசு சீட்டுகள் விற்பனை பரிசு சீட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் 50 ஆயிரம் டிக்கெட்டுகளும், சித்தூர், பட்டாம்பி ஆகிய அலுவலங்களில் தலா 10 ஆயிரம் வீதம் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை நேற்று நடந்தது. 10 சீரியல்களிலாக மொத்தம் 90 லட்சம் டிக்கெட்டுகள் மாநிலத்தில் 14 மாவட்டங்களிலாக விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. முதல் பரிசு ரூ.25 கோடியும், இரண்டாவது பரிசு ஒரு கோடி வீதம் 20 பேருக்கும், மூன்றாவது பரிசு 50 லட்சம் ரூபாய் வீதம் 20 பேருக்கும் என பரிசுகள் வழங்கப்படுகிறது. வரும் செப்டம்பர் 20ம் தேதி பரிசு சீட்டு குலுக்கல் நடைபெறுகிறது. டிக்கெட் ஒன்றின் விலை ரூ.500 ஆகும்.