திருவனந்தபுரம், ஆக. 29: கேரள மாநிலம் மலப்புரம் அருகே கொண்டோட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜீத். இவரது மகன் டேனிஷ் மின்ஹாஜ் (21). இவர் மீது வழிப்பறி, போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் உள்ளன. நேற்று காலை மின்ஹாஜ் தனது தந்தையின் காரை ஓட்டுவதற்காக கேட்டு உள்ளார். ஆனால் லைசன்ஸ் இல்லாததால் மகனுக்கு காரை கொடுக்க அப்துல் மஜீத் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மின்ஹாஜ் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினார். பின்னர் தன்னுடைய பைக்கில் இருந்து பெட்ரோலை எடுத்து தந்தையின் கார் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து மஜீத் கொண்டோட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மின்ஹாஜை கைது செய்தனர்.