மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேருராட்சிக்கு உட்பட்ட ஓட்டல், ரெஸ்டாரன்ட்டுகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபாகரனுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, கிருபாகரன் தலைமையில், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, மேற்பார்வையாளர் தாமோதரன் ஆகியோர் கிழக்கு ராஜ வீதி, ஒத்த வாடை தெரு, கோவளம் சாலையில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரன்ட் மற்றும் கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஓட்டல், ரெஸ்டாரன்ட், துணி கடை ஆகியவற்றில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்தது தெரிய வந்தது. அங்கிருந்து, 10 கிலோவுக்கும் மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ரூ.3,500 அபராதமும் விதிக்கப்பட்டது. இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபாகரன் பேசுகையில், ‘மாமல்லபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு மற்றும் விற்பனை செய்யும் ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் கடைகளுக்கு இனி, சீல் வைக்கப்படும். அதன் உரிமையாளர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.