தர்மபுரி, செப்.3: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு-ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்கள், தாபாக்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீரென ஆய்வு செய்தனர். தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா வழிகாட்டுதலின்படி, பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் குழுவினர், பாலக்கோடு-ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் சுகர்மில், மாதம்பட்டி, வெள்ளிச்சந்தை, மல்லுப்பட்டி மகேந்திரமங்கலம் மற்றும் ஜிட்டான்டள்ளி பகுதிகளில் உள்ள உணவகங்கள், தாபாக்கள், சாலையோர உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வில் உணவகங்களில் உரிய சுகாதாரம் பின்பற்றப்படுகிறதா, உணவுப் பொருட்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா, மூலப் பொருட்களில் உரிய காலாவதி தேதி உள்ளனவா, இறைச்சி மற்றும் சமையல் எண்ணெய் தரமாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
சுமார் 25க்கும் மேற்பட்ட உணவகங்கள், தாபாக்கள், பேக்கரிகளில் ஆய்வு செய்ததில், இரண்டு உணவகங்களில் பலமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் 3 லிட்டர், சில உணவகங்களில் இருந்து செயற்கை நிறமூட்டி பவுடர் பாக்கெட்கள், இரண்டு உணவகங்களில் காலாவதியான தயிர் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு மளிகை கடை மற்றும் பேக்கரியில், செயற்கை நிறம் ஏற்றப்பட்ட வறுத்த பச்சை பட்டாணி 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. நான்கு கடைக்காரர்களுக்கு தலா ₹1000 வீதம் ₹4ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், ஜிட்டாண்ட அள்ளியில் ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, கடைக்காரருக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.