தூத்துக்குடி, மார்ச் 8: ஓட்டப்பிடாரம் மற்றும் கருங்குளம் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் கல் குவாரிகளை மூடக்கோரி கிராம மக்கள் சார்பில் கலெக்டர், எஸ்பி ஆகியோரை சந்தித்து கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: கருங்குளம் ஒன்றியத்தில் உள்ள ஆலந்தா, உழக்குடி, காசிலிங்காபுரம், வல்லநாடு, சவலாப்பேரி, காரசேரி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளால் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்படுகிறது. நிலத்தடி நீர் குறைவதால், விவசாயத்திற்கு போதுமான நீர் கிடைப்பதில்லை. அதிகளவு கனிமவளங்களை எடுத்துச் செல்லும் லாரிகளால், சாலைகள் முழுவதும் சேதமடைகிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்படும் இக்குவாரிகளால், ஒரே சமூகத்திற்குள் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் இந்த குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், அடுத்தகட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு கூறியுள்ளனர். அப்போது புதிய தமிழகம் மத்திய மாவட்ட செயலாளர் செல்லதுரை, ஒன்றிய செயலாளர் பாஸ்கர், வழக்கறிஞர்கள் ரமேஷ்குமார், ஜெகன் மற்றும் மாரிமுத்துகிருஷ்ணன், பழனி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
ஓட்டப்பிடாரம், கருங்குளம் பகுதியில் கல்குவாரிகளை மூட வேண்டும்
0
previous post