விருதுநகர், மே 21: திருத்தங்கல் காவடி கூட தெருவை சேர்ந்தவர் பால அமுதா(50). ஆசிரியராக பணியாற்றி வருகிறார். விருதுநகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க திருத்தங்கலில் பஸ் ஏறினார். சிவகாசியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்சில் ஆசிரியை தனது கணவர் மற்றும் சகோதரியுடன் வந்தார். டிரைவர் சீட் இன்ஜின் அருகில் ஆசிரியையும், அவரது சகோதரியும் நின்றிருந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், பாலஅமுதா அருகில் இருந்த இரு பெண்கள் ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த நெக்ளஸ் அறுந்து விட்டதாக கூறி, அதனை கழட்டி பால அமுதா கையில் கொடுத்துள்ளனர். நெக்ளஸை வாங்கி கைப்பையில் வைத்துள்ளார். விருதுநகர் ஆத்துப்பாலம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி கைப்பையை பார்த்த போது பையில் இருந்த நெக்ளஸை காணவில்லை. இதுகுறித்து விருதுநகரில் மேற்கு போலீசில் பாலஅமுதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.