ஓசூர், ஜூலை 10: ஓசூர் அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த ஜூஜூவாடி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சிவராமப்பா(50). இவர் விவசாயத்துடன் கால்நடைகள் வளர்த்து, பால் வியாபாரமும் செய்து வந்தார். திருமணமான இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, சிவராமப்பா வழக்கம் போல் காலையில் பால் கறந்து ஊற்றி விட்டு, 8 மணியளவில் அருகிலுள்ள தோட்டத்திற்கு சென்று, கால்நடைகளுக்குத் தேவையான புல்லை அறுத்து, அவற்றை தனது காரில் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ரோஸ் கார்டன் பகுதியில், டூவீலரில் முகமூடி அணிந்து வந்த கும்பல், காரை வழிமறித்து அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி, அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடினர்.
இதில் சம்பவ இடத்திலேயே சிவராமப்பா உயிரிழந்தார். இதுபற்றி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிவராமப்பாவிற்கும், அவருடைய உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்னை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது. எனவே, சொத்து பிரச்னையில் உறவினர்கள் கூலிப்படையை ஏவி, சிவராமப்பாவை கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.