ஓசூர், செப்.2: ஓசூர் மற்றும் சூளகிரி ஒன்றியங்களில் வேளாண்மை, வேளாண்மை பொறியியல், தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ₹27.16 கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்பள்ளி கிராமத்தில் விவசாயி சீனிவாசரெட்டி, தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் 3584 சதுர மீட்டர் பரப்பளவில் 50 சதவீத மானியமான ₹15.12 லட்சம் மதிப்பில் பசுமை குடில் அமைத்துள்ளார். அதில் தோட்டக்கலை தொழில்நுட்பங்களுடன் நடவு செய்யப்பட்டுள்ள ரகங்களான எஸ்மரா- இளஞ்சிவப்பு, லிவியா- மஞ்சள், பேலன்ஸ்- வெள்ளை, இண்டன்ஸ்- அடர் இளம்சிவப்பு, கோலியாத்- ஆரஞ்சு தொழில்நுட்ப மேலாண்மை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சூளகிரி ஒன்றியம் இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி சொரக்காயலப்பள்ளி கிராமத்தில், வேளாண் பொறியியல் துறை இயந்திரங்களை கொண்டு ₹2.35 லட்சம் மதிப்பில் பாசன ஏரி தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. மேலும், சென்னப்பள்ளியைச் சேர்ந்த அன்னபங்கா என்பவர் பசுமை குடில் அமைத்து ரோஜா மற்றும் ஜெர்பரா மலர் உற்பத்தி செய்து வருகிறார். நீர்பாசன வசதிக்காக மின்மோட்டார் இயக்கும் வகையில் 70 சதவீத மானியத்தில் ₹2.59 லட்சம் மதிப்பில் சோலார் பேனல் அமைத்து சொட்டுநீர் பாசனம் மூலம் பணிகள் நடந்து வருகிறது. சென்னப்பள்ளி கிராமத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் 10 ஏக்கர் பரப்பளவில் ₹26.81 கோடி மதிப்பில் 5 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட காய்கறி முதன்மை பதப்படுத்தும் கிடங்கு மற்றும் குளிர்பான கிடங்கு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. மொத்தம் ₹27 கோடியே 15 லட்சத்து 76 ஆயிரத்து 754 மதிப்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை, நேற்று கலெக்டர் சரயு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, ஓசூர் மாநகராட்சியில் காய்கறி விற்பனை அங்காடிகளை பார்வையிட்டு, ராகி தொகுப்பு செயல்விளக்கம், துவரை செயல்விளக்கம், அட்மா திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு மொத்தம் ₹1 லட்சத்து 82 ஆயிரத்து 229 மதிப்பில் வேளாண் உபகரணங்கள் மற்றும் இடுபொருட்களை வழங்கினார். இந்த ஆய்வின் போது, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, உதவி செயற்பொறியாளர் செல்வம், வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் காளியப்பன், செயலர் ரவி, சங்கீதா, வடிவேல், சீனிவாசன், மும்மூர்த்தி சோழன், தாசில்தார் சக்திவேல், பிடிஓ.,க்கள் விமல்ரவிக்குமார், பாப்பி பிரான்சின்னா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் ஜெனிபர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.