ஓசூர், ஜூலை 26: ஓசூரில், சாரல் மழையால் சந்தையில் பூக்களின் விற்பனை மந்தமானது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலர் சந்தைகளில் அனைத்து வகை பூக்கள் விற்பனை மந்தமாக உள்ளது. ஓசூர் பகுதியில் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அதிகளவில் உள்ளனர். ஆடி பிறப்பையொட்டி, பண்டிகை கொண்டாட்டங்கள் இல்லாததால் பூக்கள் விற்பனை மந்தமாக இருந்து வருகிறது. ஓசூர் சந்தையில் கடந்த 2 நாட்களாக ரோஜா கிலோ ₹30க்கும், மல்லிகை ₹300க்கும், சாமந்தி ₹100க்கும், செண்டுமல்லி ₹20க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அரளி மற்றும் சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. விலை குறைந்த போதிலும் விற்பனை இல்லாமல் உள்ளது. மேலும் தொடர் மழையால் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.