ஓசூர்: ஓசூரில் பெண் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, மாநகராட்சி பகுதிகளில் தீவிர டெங்கு தடுப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஓசூர் ராயக்கோட்டை ரோட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 45 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. அவர் ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து, அப்பகுதியில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடித்தும், வீடு வீடாக சென்று வீடுகளில் கொசுப்புழு உற்பத்தியாகி உள்ளதா என பார்வையிட்டனர். மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது