மரக்காணம், நவ. 28: மரக்காணம் ஒன்றியத்தில் காணிமேடு, மண்டகப்பட்டு, கொள்ளுமேடு, கந்தன்பாளையம், ஆலத்தூர், அசப்போர், ராயநல்லூர், நாவல்பாக்கம், பந்தாடு நகர், வட நற்குணம் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஊராட்சிகளுக்கு இடையில் செல்கிறது ஓங்கூர் ஆறு. இந்த ஆற்றில் பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். அப்போது ஆற்றுக்கரையோரம் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். ஓங்கூர் ஆற்றின் வெள்ளப்பெருக்கில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடை அடித்து செல்லப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது காணிமேடு மற்றும் மண்டகப்பட்டு கிராம மக்கள் மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் 10 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும். இதனால் காணிமேடு பகுதியில் கடந்த 25 ஆண்டுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்தத் தரைபாலமும் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கில் மூழ்கி விடும். இதனால் காணிமேடு பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு காணிமேடு பகுதியில் ஓங்கூர் ஆற்றில் மேம்பாலம் கட்ட ₹9.5 கோடி நிதியை கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்தது.
இதனைத் தொடர்ந்து ஓங்கூர் ஆற்றில் காணிமேடு, மண்டகப்பட்டு கிராமங்களுக்கு இடையில் 200 அடி தூரத்தில் கட்டப்பட்டிருந்த பழைய தரைப்பாலத்தை உடைத்து, 400 மீட்டர் நீளத்துக்கு ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இதனால் ஆற்றின் வழியாக பொதுமக்கள் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையால் ஓங்கூர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தற்காலிக தரைப்பாலம் ஆற்றின் வெள்ளத்தோடு அடித்துச் செல்லப்பட்டது. இதனால் வழக்கம் போல் கிராம மக்கள் 10 கி.மீ. தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டினால் மட்டுமே தங்களின் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஆற்று தரைப்பாலம் வெள்ளநீரில் அடுத்து சென்றதை அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் பழனி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்பகுதியில் நீரோட்டம் இருப்பதால் வெள்ளத்தில் பொதுமக்கள் செல்ல கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார்.