விருதுநகர்: ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை அனைவரும் வளர்த்து முன்னேற வேண்டும் என, மாணவ, மாணவிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலெக்டர் தெரிவித்தார். விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் காபி வித் கலெக்டர் எனும் 35வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவியரிடம் கலெக்டர், அவர்களின் லட்சியம், எந்த துறையில் ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி, இடம் குறித்து கேட்டறிந்தார். இலக்குகளை தேர்வு செய்வதில் தெளிவாக, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். விருப்பம் சார்ந்த படிப்பை தேர்வு செய்வதை விட அடுத்த 30, 40 வருடங்களுக்கு சமூகத்தில் எந்த படிப்புக்கு எதிர்காலம் இருக்கும் என்பதை அறிந்து படிக்க வவேண்டும். பிளஸ் 2 தேர்வில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை அனைவரும் வளர்த்து முன்னேற வேண்டும் என்றார்.