க.பரமத்தி, மே15: சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை விலை கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல் ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் அஞ்சூர், ஆரியூர், அத்திப்பாளையம், சின்னதாராபுரம், எலவனூர், கூடலூர் கிழக்கு, கூடலூர் மேற்கு, கார்வழி, கோடந்தூர், குப்பம், மொஞ்சனூர், முன்னூர், புன்னம், தென்னிலை, துக்காச்சி ஆகிய பகுதிகள் மட்டுமல்லாது கரூர் ஒன்றிய பகுதியான புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை, உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊர்களில் இரு வெவ்வேறு ஒன்றிய கிராம புற பகுதியில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் விளையும் நிலக்கடலை தேவை அதிகரிப்பால் வியாபாரிகள் போட்டிக்போட்டு கொண்டு விவசாய நிலத்திலேயே கொள்முதல் செய்கின்றனர். தற்போது வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய முன் வராததாலும் வந்த ஒரு சிலரும் மிகவும் குறைந்த விலைக்கு கேட்பதால் பல விவசாயிகள் நிலக்கடலையை காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுக்கின்றனர். பிறகு மீதம் உள்ள கடலையை கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு ஏலத்தில் விற்பனை செய்வதற்காக செல்கின்றனர்.
அங்கு இரண்டு தினங்களுக்கு முன் நடந்த ஏலத்தில் 570 மூட்டை நிலக்கடலை ஒரு கிலோவுக்கு குறைந்த பட்சமாக ரூ.60க்கும், அதிகபட்சமாக ஒரு கிலோவிற்கு ரூ.73க்கும் ஏலம் போனது. கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல் ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.