புதுக்கோட்டை, ஆக.17: புதுக்கோட்டை தடி கொண்ட அய்யனார் திடலில் டிங்கரிங் வேலை பார்ப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடி கொண்ட அய்யனார் திடலில் டிங்கரிங் வேலை பார்ப்பதற்காக அன்னவாசல் அருகே உள்ள ஆரியூர் பகுதியில் செயல்படும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அந்த பேருந்தில் டிங்கரிங் பணியாளர்கள் வெல்டிங் வைத்து டிங்கரிங் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது திடீரென வெல்டிங்கிலிருந்து ஏற்பட்ட தீப்பொறி தீ விபத்தாக மாறி கல்லூரி பேருந்து தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும் இந்த தீ விபத்தால் பேருந்தின் உள்பகுதி முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. மேலும் இந்த தீ விபத்து குறித்து கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.