விருதுநகர், ஜூன் 5: விருதுநகரின் முக்கிய சாலையாக ராமமூர்த்தி சாலை உள்ளது. இதன் வழியாகவே, காரியாபட்டி, மல்லாங்கிணறு, பேராலி, பாண்டியன் நகர் ஆகிய பகுதிகளுக்கு செல்ல முடியும். மேலும், இச்சாலையானது, விருதுநகர் நகர் பகுதியிலிருந்து விரைவாக அருப்புக்கோட்டை சாலைக்கு செல்லவும் மிகவும் பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சாலை துவங்கும் அல்லம்பட்டி முக்குரோடு பகுதி முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை சுமார் 1 கி.மீ தூரத்தில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமானது, சாலையின் குறுக்கே சிறிய அளவிலான வேகத்தடைகளை 8 இடங்களில் அமைத்துள்ளது. அதாவது அடுத்தடுத்து சில அடி தூர இடைவெளியில் வேகத்தடைகளை போட்டுள்ளனர்.
இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் முதுகெலும்பு பாதிப்பு மற்றும் வாகன உதிரி பாகங்கள் சேதமடைவதாக புகார் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், சாலையில் செல்லும் வாகனங்களில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி நோயாளிகளை அவதிக்குள்ளாக்கும் சிறிய அளவிலான இந்த வேகத்தடைகளை அகற்றிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கார் ஓட்டுநர் செண்பகமூர்த்தி கூறுகையில், விருதுநகரில் பல்வேறு இடங்களில் அதிர்வு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசு மருத்துவமனையில் இருந்து அருப்புக்கோட்டை ரோடு செல்லும் வழியில் 1 கி.மீ தூரத்தில் 8 அதிர்வு வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்தடுத்த வேகத்தடைகளின் அதிர்வுகளினால் முதுகுத் தண்டுவடத்தில் வலி ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து அந்தப் பாதையில் பயணிப்பதால் வண்டியின் உதிரி பாகங்கள் சேதமடைகிறது. எனவே இந்த அதிர்வு வேகத்தடைகளை அகற்றி பழைய முறையிலான வேகத்தடைகளை தேவையான இடத்தில் மட்டும் அமைக்குமாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.