சேலம்: சேலம் ரயில்வே உட்கோட்டத்திற்கு உட்பட்ட லோகூர்-டேனிஷ்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நேற் று முன்தினம் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர், தண்டவாளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அதில், அவரது பாக்கெட்டில் காட்பாடியில் இருந்து கோழிக்கோடு வரை செல்ல டிக்கெட் இருந்தது. மேலும், கிடைத்த அடையாள அட்டை மூலம் இறந்தவர், ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகேயுள்ள மதனப்பள்ளியை சேர்ந்த முகமதுஷபி (38) எனத்தெரியவந்தது. இவரது சொந்த ஊர் கோழிக்கோடு. அவரது சடலத்தை சேலம் அரசு மருத்துவமனை பிரேதப்பரிசோதனைக்கு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இதேபோல், நேற்று முன்தினம் இரவு சேலம்-விருத்தாச்சலம் பாதையில் மின்னாம்பள்ளி ரயில்வே ஸ்டேஷன் அருகே தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். ரயில்வே போலீஸ் எஸ்ஐ விக்னேஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்தனர். அதில் இறந்தவர், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள சின்னமசமுத்திரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (36) எனத்தெரியவந்தது. கட்டிட வேலை பார்த்துவிட்டு, சேலம்-விருத்தாச்சலம் ரயிலில் பெத்தநாயக்கன்பாளையம் செல்லும்போது, ரயில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது.