மூணாறு, அக். 17: கனமழை வெளுத்து வாங்கியதில் மூணாறு-லட்சுமி சாலையில் தண்ணீர் சூழ்ந்ததால் வாகனஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். கேரள மாநிலம் மூணாறு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒருவாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வரும் இரண்டு தினங்களுக்கு இடுக்கி மாவட்டத்தில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
மூணாறில் நேற்று பெய்த கன மழையில் பழைய மூணாறு அருகே ஓடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் தேங்கி நின்றதால் மூணாறு – லட்சுமி சாலையில் தண்ணீர் சூழ்ந்தது. பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் மழை நீர் தேங்கி உள்ளதால், சாலைகள் குளம் போல் காட்சி அளிக்கிறது. இது அந்த வழியே செல்லும் வாகனங்கள் மற்றும் கால்நடை பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
அப்பகுதியில் உள்ள ரிசாட்டுகள் மற்றும் உணவகங்கள் அலட்சியமாக தூக்கி எரியும் பிளாஸ்டிக் குப்பைகள் தான் ஓடைகளில் மழை நீர் தேங்க காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். எனவே ஊராட்சி இந்த பிரச்சனையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.