ஈரோடு, மே 25: ஈரோடு பஸ் ஸ்டாண்டுக்கு ஒரு வழிப்பாதையாக மேட்டூர் சாலையில் வந்த, அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெருந்துறை சாலை, சென்னிமலை சாலை, கரூர் சாலைகளில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் வாசுகி வீதி, அகில்மேடு வீதி வழியாக பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல வேண்டும். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் எக்காரணம் கொண்டும் மேட்டூர் சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட்டிற்குள் பஸ்கள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என போக்குவரத்து போலீசார் தடை விதித்துள்ளனர்.
ஆனால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா வந்ததும், வாசுகி வீதி வழியாக செல்லாமல், மேட்டூர் சாலையில் சென்று அகில்மேடு வீதியை அடைந்து பஸ் ஸ்டாண்ட் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று ஈரோடு வடக்கு போக்குவரத்து பிரிவு எஸ்ஐ சண்முகம் தலைமையில் விதிமுறைகளை மீறி வந்த லாரி, 18 அரசு பஸ், 7 தனியார் பஸ்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.