பாலக்கோடு, மே 6: பாலக்கோடு அருகே, சட்டவிரோதமாக விளைநிலத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து, வளர்க்கப்பட்ட ஒரு டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை, பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர். பாலக்கோடு அருகே ரெட்டியூர் கிராமத்தில், தடைசெய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை, விவசாய நிலத்தில் பண்னை குட்டை அமைத்து வளர்த்து, விற்பனை செய்து வருவதாக, கலெக்டர் சாந்திக்கு புகார்கள் வந்தது. அவரது உத்தரவின் பேரில், தாசில்தார் ராஜா தலைமையிலான குழுவினர், நேற்று ரெட்டியூர் கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது விவசாயி முனுசாமி (39) என்பவரின் தோட்டத்தில், 3 பண்ணை குட்டைகள் அமைத்து, அதில் ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்களை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த குட்டைகளில் ஒரு குட்டையில் மீன் குஞ்சுகளும், மற்றொரு குட்டையில் சிறிய மீன்களும், 3வது குட்டையில் விற்பனைக்கு தயாரான நிலையிலும் மீன்கள் என, சுமார் 1 டன் மீன்களை வளர்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து பொக்லைனை வரவழைத்த அதிகாரிகள், விளைநிலத்தில் குழிதோண்டி மீன்களை உள்ளே போட்டு, பிளீச்சிங் பவுடர் கொட்டி அழித்து, மண்ணை போட்டு மூடினர். இந்த ஆய்வின் போது, வருவாய் ஆய்வாளர் ரவி, விஏஓ குமரன், மீன்வள சார்ஆய்வாளர் வெங்கடேசன், மேற்பார்வையாளர் சிங்கதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.