வேலூர்: ஒரு சில நாட்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், கோடைக்காலத்தில் வாகனங்கள் தீப்பிடித்து எரிவதை தடுப்பது குறித்து ஆயில் நிறுவன அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி ஜூன் இறுதி வரை 4 மாதம் கோடை காலமாகும். இந்தாண்டு கோடைகாலத்திற்கு முன்பாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக 92 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி வருகிறது. சில நாட்களிலேயே வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறுப்படுகிறது. மேலும் மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28ம் தேதி வரை நீடிக்கிறது. இதனால் வெயில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு காரணம் கோடையில் வாகனத்தில் முழுவதும் எரிபொருள் நிரப்பும்போது சீரான காற்று கிடைக்காமலும், வெப்ப தாக்கம் காரணமாகவும் வாகனங்கள் எளிதில் தீப்பிடிக்கிறது. இதுபோன்ற தீப்பிடிப்பு சம்பவங்களை தவிர்க்க வாகனங்களில் எரிபொருள் பாதியளவே நிரப்ப வேண்டும் என ஆயில் நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: வழக்கமான நாட்களில் வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்காது. ஆனால் கோடை காலத்தில் வெப்பமானது கடுமையாக சுட்டெரிக்கும். இந்த நேரங்களில் வெப்பத்தின் தாக்கத்தால், எரிபொருள் டேங்குக்கு போதிய காற்று கிடைக்காது. இதனால் வாகனங்கள் எளிதில் தீப்பிடித்து கொள்ளும் வாய்ப்புள்ளது. அதிகபட்ச வரம்பிற்குள் வாகனத்தில் பெட்ரோல், டீசலை நிரப்ப வேண்டாம். வாகனத்தில் பாதியளவு மட்டுமே எரிப்பொருள் நிரப்ப வேண்டும். அப்போது தான் காற்று வரும். இல்லாவிட்டால் காற்று வர இடம் இல்லாமல் எரிபொருள் சூடேறி வாகனம் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் பெட்ரோல் டேங்க்கை ஒரு நாளைக்கு ஒருமுறை திறந்து உள்ளே உள்ள வாயுவை வெளியேற்ற வேண்டியது மிகவும் அவசியம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பைக்குகளை பராமரிப்பது எப்படி?: வெயிலில் பைக்கை நிறுத்தாமல், நிழலில் நிறுத்தினாலே பல பிரச்னைகளில் இருந்து தப்பிக்கலாம். பைக்குகளில் பெட்ரோல் டேங்க் வெளியில் இருப்பதால், சூரிய வெளிச்சம் நேரடியாக படும். பெட்ரோல் எளிதில் ஆவியாகக்கூடியது என்பதால், பெட்ரோல் டேங்க் கவர் வாங்கிப்போடலாம். பெட்ரோல் டேங்க் மூடி தளர்வாக இருந்தால், அதை டைட் செய்துவிடுங்கள். கோடை காலத்தில் நம்முடைய ஹெல்மெட்டும் சூடாகும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தொடர்ந்து வெயிலில் ஓட்டும்போது ஹெல்மெட் சூடாகும். அதனால் அவ்வப்போது பைக்கை சாலையோரம் நிறுத்தி இளைப்பாறிச் செல்வதே நல்லது. டூவீலர் டயர்களின் காற்றழுத்தம் பெரும்பாலும் குறையாது என்றாலும், வாரத்துக்கு ஒருமுறை காற்றழுத்தத்தைச் சோதித்து விடுவது நல்லது என ஆட்டோ மொபைல் இன்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர்.இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும்: கோடை காலத்தில் அதுவும், மதிய நேரங்களில் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்காதது போல இருக்கும். இந்த உணர்வு அதிகமாக இருந்தால் கடைசியாக இன்ஜினில் எப்போது ஆயில் மாற்றினீர்கள் என பாருங்கள். கோடைகாலம் துவங்குவதற்கு முன்பு ஆயில் மாற்றப்படவில்லை என்றால், இன்ஜின் ஆயிலை முழுவதையும் மாற்றவேண்டும். இதனால் இன்ஜின் ஸ்மூத்தாக இயங்கும் என இன்ஜினியர்கள் தெரிவித்துள்ளனர். …