சென்னை, அக்.19: ஒரு உயிர் போனால் யார் பதில் சொல்வது என்றும், தெருவை நம்பி மாடுகளை வளர்ப்பதற்கு அதன் உரிமையாளர்களுக்கு உரிமை கிடையாது. எனவே, மாநகராட்சி நடவடிக்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறினார். திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோயில் பகுதியில் 80 வயது முதியவர் ஒருவரை மாடு முட்டியதில் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ரிப்பன் மாளிகையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு வாகனத்தை வைத்து, கடந்த 10 மாதங்களில் 3737 மாடுகளை பிடித்துள்ளோம். இந்த மாதத்தில் மட்டும் 170 மாடுகளை பிடித்துள்ளோம். ஏற்கனவே அரும்பாக்கத்தில் ஒரு மாணவியை மாடு புரட்டி எடுத்தது. அதேபோன்று அம்பத்தூர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம். இன்றைய தினம் (நேற்று) ஒரு மாடு 80 வயது வாய் பேச முடியாத ஒரு முதியவரை புரட்டி போட்டுள்ளது. அந்த நபரை நான் மருத்துவமனையில் போய் சந்தித்தேன். மூத்த மருத்துவர்கள் குழு அமைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த மாதிரியான நிலையை, மாட்டின் உரிமையாளர்கள் உணரவே மாட்டேன் என்கிறார்கள். இது முதல்முறை அல்ல. சிறுமிக்கு அடுத்தபடியாக, எம்எல்ஏ அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் மற்றும் நங்கநல்லூரில் ஒருவரின் குடலே வெளியே வந்தது. ஆனால் மாட்டின் உரிமையாளர் என்பதால் அந்த செய்தியே வெளியில் வரவில்லை. 90 சதவீத மக்கள் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், மாட்டு உரிமையாளர்கள் மட்டும் ஏதோ நாங்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எதிரானவர்கள் என்ற மாதிரி நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் தயவு செய்து இந்த வீடியோவை பார்க்க வேண்டும். நானே கால்நடை மருத்துவமனையில் மேற்படிப்பு படித்தவன். காளை மற்றும் மாடுகள் என்பது மாட்டு உரிமையாளர்களிடம் ஒரு வகையாக இருக்கும். ஆனால் தெருக்களில் திரியும் போது அதன் நடவடிக்கை எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. மாட்டு உரிமையாளர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் கிடையாது. அவர்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய அளவுக்கு இடங்கள் இருந்தால் மாடுகளை வைத்துக் கொள்ளலாம்.
கடந்த ஆண்டில் மட்டும் மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் எக்காரணத்தை கொண்டும் சென்னை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காது. இன்று மட்டும் 5 மாடுகளை பிடித்துள்ளோம். அதேபோன்று சிலர் கோயில் மாடு என்கிறார்கள். எந்த மாடாக இருந்தாலும், அந்த மாட்டை அப்புறப்படுத்தும் நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும். முதல் தடவை பிடிபட்டால் ரூ.5000 அபராதம், தொடர்ந்து பிடிபட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். கடைசி கட்டத்தில் அதை கையகப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். மாட்டு உரிமையாளர்கள் ஏதோ நாங்கள் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எதிரானவர்கள் என்று நினைக்கின்றனர். அப்படி கிடையாது. அதே நேரத்தில், ஒருவரது உயிர் பாதிக்கும் வகையில் திரியும் மாடுகளை சுத்த விட்டால், அந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாட்டை சரியாக பராமரிக்காவிட்டால் அதற்கான சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏனென்றால், ஒரு உயிர் போனால் அரசும், மாநகராட்சியும் தான் பதில் சொல்ல வேண்டும். எனவே தான் மாட்டு உரிமையாளர்களும் மக்கள் எதிர்ப்பை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், மாநகராட்சி வண்டி வரும் போது கட்டி வைத்துக் கொள்கிறார்கள். போன பின்பு அவிழ்த்து விடுகிறார்கள். இப்படி கண்ணாமூச்சி காட்டுவதும் தவறு. ஏனென்றால் சிசிடிவியில் பதிவாகி கொண்டிருக்கிறது. மாடு வளர்ப்பதற்கான விதிகளின்படி அவற்றை வளர்த்தால் நாங்கள் எதற்கு நடவடிக்கை எடுக்கப் போகிறோம். 15 மண்டலங்களிலும் தொடர்ந்து மாடுகளை பிடிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெருவில் சுத்தும் மாடுகள் காகிதங்களை சாப்பிடுகிறது. ஒரு மாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்தபோது 62 கிலோ பிளாஸ்டிக் பொருள் வயிற்றுக்குள் இருந்து அகற்றப்பட்டது. இதை மாட்டு உரிமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விதாண்டாவாதம் செய்தால், பணி செய்ய விடாமல் தடுத்தல் என்ற பிரிவின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாடுகளை உரிமையாளர்கள் தெருவை நம்பி வளர்ப்பது அவர்களுக்கு உரிமை கிடையாது. விஞ்ஞான ரீதியாக சொல்கிறேன், நகர் பகுதியில் இதுமாதிரி விலங்குகள் இருந்தால் நோய் பரவும் அபாயமும் இருக்கிறது. பலர் பாதுகாப்பாக வளர்க்கிறார்கள். சிலர் தான் தெருவை நம்பிக் கொண்டு சவாலாக இருக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பெரிய வைரலாகி மாநகராட்சிக்கே அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கிறது. மாநகராட்சிக்கு என்று சில சட்ட திட்டங்கள் உள்ளது.
அதை கண்டிப்பாக செயல்படுத்துவோம். 1913 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். மாடுகளை தனியாக கட்டுவதற்கு மாநகராட்சி இடங்கள் இருந்தால், அங்கு வளர்ப்பதற்கான முயற்சிகளையும் எடுப்போம். அது கொள்கை முடிவு. உடனடியாக செய்ய முடியாது. காவல் துறை இருக்கும் போதே மாட்டு உரிமையாளர்கள் சவால் விடும் வகையில் பேசுவது பதிவே ஆகியுள்ளது. அது நல்லதல்ல. சட்ட திட்டத்துக்கு உட்பட்டு மாடுகளை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டில் மட்டும் மாடுகளால் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் எக்காரணத்தை கொண்டும் சென்னை மாநகராட்சி எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காது.