தஞ்சாவூர், செப். 5: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு நகர் பகுதியான பாலன் நகர், ஆசை நகர், திருவள்ளுவர் நகர், அனைத்து மகளிர் காவல் நிலைய சாலை உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றி திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களை அவ்வப்போது தாக்க முற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால், பள்ளி மாணவ, மாணவிகள் ஒரு கி.மீ. வரை சுற்றி செல்லவேண்டிய நிலை உள்ளது.
மேலும், மலையப்பன் சாலையில் உள்ள அரசு மதுபான கடைக்கு மிக அருகிலேயே தேங்கி கிடக்கும் குப்பை, கூளங்களில் பன்றிகள் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இதனால் ஒரத்தநாடு பகுதியில் மர்ம காய்ச்சல் பரவும் அபாய சூழ்நிலை இருந்து வருகிறது. பன்றிகளை அப்புறப்படுத்துமாறு, ஒரத்தநாடு பேரூராட்சிக்கு பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.