திருப்போரூர். திருப்போரூர் அருகே ஒரகடம் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த ஐந்து குடிசை வீடுகளை வருவாய்த்துறையினர் நேற்று அதிரடியாக அகற்றினர். திருப்போரூர் வட்டம், ஒரகடம் கிராமத்தில், புல எண் 416ல் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் தற்காலிக குடிசை வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து வருவாய்த்துறைக்கு பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை யின் அடிப்படையில் பையனூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் சங்கிலி பூதத்தான், ஒரகடம் கிராம நிர்வாக அலுவலர் மலர்கொடி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர். மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு 15 லட்சம் ரூபாய் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.