திருப்பூர், அக்.4: ஒப்பந்த ஊழியர்களை பணி குறைப்பு செய்யக்கூடாது என வலியுறுத்தி திருப்பூர் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன்பு அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டிஎன்டிசிடபுள்யு சங்க மாநில நிர்வாகி ரமேஷ் தலைமை வகித்தார். பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில உதவி செயலாளர் சுப்பிரமணியம், ஏஐபிடிபிஎ கிளை செயலாளர் விஸ்வநாதன், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்க கிளை தலைவர் குமரவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்த ஊழியர்களை பணி குறைப்பு செய்யக்கூடாது, ஊழியர்களுக்கு உரிய சம்பளம் வழங்கிட வேண்டும், ஊதிய குறைவான டெண்டரை ரத்து செய்ய வேண்டும், இஎஸ்ஐ, பிஎப் முறையாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.