விருதுநகர், ஆக.2: விருதுநகர் நகராட்சி ஒப்பந்தகாரர் கொலை வழக்கில் 2 பேரை நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். விருதுநகர் மேல தெருவை சேர்ந்த குமரவேல்(47). நகராட்சி ஒப்பந்தகாரரான இவர் மருதுசேனை அமைப்பின் மாநில பொருளாளராக இருந்து வந்தார். நகராட்சி குத்தகை ஒப்பந்தம் தொடர்பாக இவருக்கும் மையிட்டான்பட்டி ஞானசேகருக்கும் முன்பகை இருந்து வந்தது. ஞானசேகர் மகன் வினித் காரைக்குடியில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் குமரவேல் சேர்க்கப்பட்டு, பின் பெயர் நீக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனால் ஞானசேகரன் தரப்பினர் விரோதம் கொண்டு ஜூலை 26ல் கூலிப்படை மூலம் விருதுநகர் மாம்பழப்பேட்டை அலுவலத்தில் இருந்த குமரவேலை கொலை செய்தனர். கொலை வழக்கில் 8 கூலிப்படையினர் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் மதுரை ஜே.எம் 6 நீதிமன்றத்தில் ஞானசேகர் மற்றும் விக்ரமன் சரண்டர் ஆகி, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.கூலிப்படையை சேர்ந்த விருதுநகர் பால்பாண்டி என்ற பவர்பாண்டி, சிவகாசி செல்வம், கட்டையாபுரம் பாதமுத்துக்குமார், அல்லம்பட்டி வெங்கடேஷ், கருப்பசாமி நகர் விஜயகுமார், ராஜபாளையம் அந்தோணிராஜ்(25) ஆகிய 6 பேரை விருதுநகர் மேற்கு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
கடந்த ஜூலை 30ல் விருதுநகர் அமிர்தசங்கர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜராகி சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சிவகாசி தங்க முனீஸ்வரன்(24), சிவகாசி முருகானந்தம்(25) ஆகிய இருவரை விருதுநகர் ஜே.எம்.1 நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையை சேர்ந்த மேலும் சிலரையும் போலீசார் தேடிவருவதாக தெரிவித்தனர்.