சிவகங்கை, ஆக. 28: ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) ஏமாற்று வேலை என ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:ஒன்றிய அரசு அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. ஊழியர்களை தவறாக வழிநடத்தும் முயற்சியில் ஒன்றிய அரசு என்பிஎஸ் ஐயுபிஎஸ் என பெயர் மாற்றம் செய்துள்ளது.
யுபிஎஸ் என்பது ஆந்திராவின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் நகலாகும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. பழைய ஓய்வூதியத் திட்டம் அரசியல் பிரச்னையாக மாறி, கடந்த மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், ஊழியர்களின் கோபத்தையும், அரசியல் விளைவுகளையும் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச நிவாரணம் வழங்கும் ஒன்றிய அரசின் இந்த புதிய நடவடிக்கை ஏமாற்று வேலையாகும். பழைய ஓய்வூதியத்திற்கான போராட்டம் தொடரும், மேலும் தீவிரப்படுத்தப்படும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை முழுமையாகத் திரும்ப வழங்கவேண்டும். ராஜஸ்தான் போன்ற பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்ட மாநிலங்கள் உட்பட பல மாநில அரசுகளையும், யுபிஎஸ் திட்டத்தின் மூலம் சீர்குலைக்க வேண்டாம். அதற்கான எந்த முயற்சியும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கோபத்தை அதிகரிக்கும்.
மாநில அரசு ஊழியர்களின் பங்களிப்பில் தங்கள் பங்கை தங்கள் மாநில அரசுகளுக்குத் திருப்பித் தருமாறு வலியுறுத்திய மாநில அரசுகளின் கோரிக்கைகள் அனைத்தையும் மோடி அரசு நிராகரித்துவிட்டு யுபிஎஸ் எனப்படும் ஏமாற்று திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தை மோடி அரசு உடனடியாக கைவிட வேண்டும். ஒன்றிய அரசின் புதிய திட்டத்தை அமல்படுத்தாமல் தமிழகத்தில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.