சென்னை: ஒன்றிய தொலைதொடர்பு அதிகாரி பேசுவதாக கூறி, ஓய்வுபெற்ற ஒன்றிய பொதுத்துறை அதிகாரியை மிரட்டி ₹88 லட்சம் பறித்த 4 வடமாநில வாலிபர்களை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் அசாம் மாநிலத்தில் கைது செய்தனர். திருவான்மியூரை சேர்ந்த ஒன்றிய பொதுத்துறை ஓய்வுபெற்ற நிர்வாக அதிகாரி ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கடந்த செப்டம்பர் 3ம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், என்னை செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தன்னை ஒன்றிய தொலைத்தொடர்பு துறை முதன்மை அதிகாரி என கூறி, எனது விவரங்களை கேட்டறிந்தார். பிறகு, மும்பை போலீஸ் அதிகாரிகள் ஒரு வழக்கு தொடர்பாக உங்களிடம் விசாரிக்க வேண்டும், என மற்றொரு அழைப்பை இணைத்தார்.
அதில், மும்பை போலீஸ் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட நபர், என் மீது பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்கு உள்ளதாகவும், இதனால் டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய உள்ளதாகவும் கூறி, எனது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண் மற்றும் வங்கி விவரங்களை பெற்றார். சிறிது நேரத்தில், எனது வங்கி கணக்கில் இருந்த ₹88 லட்சத்தை இரு தவணைகளாக எடுத்துக்கொண்டனர். இதுபற்றி கேட்டபோது, விசாரணை முடிந்ததும் பணத்தை திருப்பி தருவதாக கூறி, மர்ம நபர்கள் மோசடியில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி போலீசார், ஓய்வுபெற்ற அதிகாரி பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்களை பெற்று ஆய்வு ெசய்த போது, அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள தனியார் வங்கியின் கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டது தெரியவந்தது. பிறகு அந்த வங்கி கணக்கில் இருந்து வெவ்வேறு மாநிலங்களில் உள்ள 178 வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வங்கி கணக்கு ஹர்ஷி ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என தெரியவந்தது. உடனே போலீசார் அசாம் மாநிலம் சென்று அந்த வங்கி கணக்கின் நிறுவன அதிகாரி பார்தா பிரதிம் போரா (38) என்பவரை கடந்த 14ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின்படி வழக்கின் முக்கிய குற்றவாளிகளான அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த துருபாஜோதி மஜீம்தார் (25), ஸ்வராஜ் பிரதான் (22), பிரசாந்த் கிரி (21), பிரஞ்ரல் ஹசாரிகா (28) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் டெல்லி, கொல்கத்தா, கேரளா, ெஜய்பூர், மும்பை மற்றும் கோவை பகுதியில் உள்ள முகவர்கள் அளிக்கும் தகவலின்படி பொதுமக்களை தொடர்பு கொண்டு மோசடி செய்து, அந்த பணத்தை கமிஷன் போக மீதமுள்ள பணத்தை லாவோஸ், கம்போடியா, வியட்நாம், தைவான், பாங்காக் ஆகிய நாடுகளுக்கு சீன முதலாளிகளுக்கு அனுப்பியது தெரியவந்துள்ளது. பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் சென்னை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.