ஈரோடு, ஜூலை 5: ஒன்றிய அரசை கண்டித்து வரும் 9ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்ததில் ஜாக்டோ-ஜியோ சார்பில் ஈரோட்டில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்க திடலில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய அரசின் தனியார் மயத்தை கைவிடக்கோரியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக வரும் 9ம் தேதி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. இந்த வேலை நிறுத்தத்தில் ஈரோடு மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முழுமையாக பங்கேற்று, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.