விழுப்புரம், ஜூலை 4: ஒன்றிய அரசை கண்டித்து 9ம் தேதி நடக்கும் ஸ்டிரைக்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கிறது என விழுப்புரத்தில் கு.பாலசுப்பிரமணியன் கூறினார். விழுப்புரத்தில் நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன், மாநில செயலாளர் இளங்கோவன், பொருளாளர் ஜெய்கணேஷ், ஊராட்சி களப்பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவக்குமார், டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கூறுகையில், ஒன்றிய அரசு, தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் பறித்துவிட்டு 4 சட்டங்களை புதிதாக உருவாக்கியுள்ளது. இந்த சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் 95 சதவீத தொழிலாளர்கள் எந்தவித பலன்களையும் பெற முடியாத நிலைமை ஏற்படும். இதனை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 9ம் தேதி அகில இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனை நாங்கள் வரவேற்கிறோம். இப்போராட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் பங்கேற்க உள்ளோம். 9ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கம் மற்றும் அதனை சார்ந்துள்ள 10க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள். தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டமும் நடத்த இருக்கிறோம், என்றார்.