கரூர், செப். 8: ஒன்றிய அரசை கண்டித்து கரூர் மற்றும் குளித்தலையில் நடந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 209 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வுக்கும், அதிகரித்து வரும் வேலையின்மை கொடுமைக்கும் இந்திய வரலாற்றிலேயே இல்லாத 7.50 லட்சம் கோடி மெகா ஊழல் செய்த மோடி அரசை கண்டித்தும் நேற்று ரயில் மறியல், சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் குளித்தலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை வகித்தார். மாநகர செயலாளர் தண்டபாணி, கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், கந்தசாமி, முருகேசன், ராஜா முகமது உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மனோகரா கார்னர் பகுதியில் அமர்ந்து திடிரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, டவுன் போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பெண்கள் உட்பட 100 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குளித்தலை:
குளித்தலை தலைமை தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாஜக அரசை கண்டித்து மறியல் போராட்டம் ஒன்றிய செயலாளர் முத்துசெல்வன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக குளித்தலை காந்திசிலையிலிருந்து ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக தலைமை தபால் நிலையம் வரை சென்றனர். அங்கு அனைவரும் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 31 பெண்கள் உள்ளிட்ட 109 பேரை குளித்தலை போலீசார் கைது செய்தனர்.