சூலூர்: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் சூலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளியவர்களுக்கு பயனளிக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க முயற்சி செய்யும் ஒன்றிய பாஜ அரசை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கி, பேசுகையில், ‘’கிராமப்புறங்களில் வயது முதிர்ந்த தொழிலாளர்கள் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அவர்களுடைய வாழ்வாதாரத்தை பறித்துவிட்டு, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ரூ.25 லட்சம் கோடிக்கு மேலாக கடன் தள்ளுபடி செய்கிறது, ஒன்றிய பா.ஜ. அரசு. ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒன்றிய பா.ஜ. அரசை, வீட்டுக்கு அனுப்பும் நேரம் நெருங்கிவிட்டது.’’ என்றார்.