பழநி, ஜூலை 29: பழநியில் ஒன்றிய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழநி தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்பபாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் லாசர், பழநி ஒன்றிய தலைவர் ஆறுமுகம், செயலாளர் துரைச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர் பேச்சியம்மாள், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பழநி ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒன்றிய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடிக்கு பதிலாக ரூ.86 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கி திட்டத்தை முடக்கும் செயலில் ஒன்றிய அரசு ஈடுபடக் கூடாது, உணவு மானியத்தை குறைக்கக் கூடாது, உர மானியம், உணவு மானியம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
பழநியில் நகர காங்கிரஸ் கமிட்டி மற்றும் மேற்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் முத்து விஜயன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மண்டலத் தலைவர் வீரமணி, மாவட்ட துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் மாசிலாமணி, முன்னாள் கவுன்சிலர் சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.